" அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் எமன் தேசத்தை நோக்கியவர்களாக யா அல்லாஹ் ! இவர்களுடைய உள்ளங்களை என் பக்கமாக ஆக்குவாயாக என்று பிரார்த்தித்தார்கள் . அதன்பின் ஈராக் மற்றும் ஷாம் பக்கம் திரும்பி அவ்வாறே பிரார்த்தித்தார்கள். இன்னும் எங்களுடைய கொடுக்கல் வாங்களிலும் பரக்கத் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் . "
[ நூல் - மஜ்மவுஸ் ஸவாயித் , பாகம் 3,பக்கம் 304 . முஸ்னத் அஹ்மத் ,பாகம் 5,பக்கம் 135 .அதபுல் முப்ரத் ,இமாம் புஹாரி .கன்சூல் உம்மால் ]
" ஷாம் தேசத்தின் பக்கமாக பார்த்த அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் யா அல்லாஹ் ! அவர்களுடைய உள்ளங்களை உன்னை வழிபடுவதற்குரிய உள்ளங்களாக ஆக்குவாயாக . இன்னும் அவர்களை சூழ இருப்பவர்களையும் உனது அருளைக் கொண்டு சூழ்ந்து கொள்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் . பின்னர் எமன் தேசத்தின் பக்கமாகவும் ,ஈராக் தேசத்தின் பக்கமாகவும் திரும்பி அது போன்றே பிரார்த்தித்தார்கள் . "
[ நூல் - முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் ]
மேற்கண்ட இரு நபிமொழிகளிலும் நபியவர்கள் ஷாம் தேசத்திற்காகவும் , எமன் தேசத்திற்காகவும் பிரார்த்தித்த பொழுது தெளிவாக ஈராக் தேசத்திற்காகவும் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் .
அதன்பின் ஷாமுக்காகவும் ,எமனுக்காகவும் பிரார்த்தித்த பொழுது நாயகமே ! எங்கள் நஜ்த்துக்காகவும் பிரார்த்தியுங்கள் என்று கேட்க ,அதற்கு நபியவர்கள் பிரார்த்தனை செய்யாமல் போனதோடு அங்கிருந்து தான் பிரசச்னைகளும் ,ஷைத்தானின் கொம்பும் உதயமாகும் என்று சொல்லப்பட்ட தகவல் ஈராக்கைத் தான் சாரும் என்று குறிப்பிடுவது அறிவிலித்தனம் இல்லையா ?
இனி ஈராக் நாட்டிலுள்ள கூபா பற்றிய சில ஹதீதுகளை பார்ப்போம் .
கூபாவில் பிறந்தவர்கள் தான் இமாமுல் அஃலம் இமாம் அபூ ஹனீபா
رحمه الله அவர்கள் . இந்த நகரம் அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா உமர்
رضي الله عنه அவர்களின் கட்டளையின் பேரில் ஹழ்ரத் செய்யிதினா ஸஃத் இப்னு அபீவக்காஸ் رضي الله عنه அவர்களால் பாதுகாக்கப்பட்ட நகரமாகும் .
இந்நகரில் கிட்டத்தட்ட 1500 நபிமணித் தோழர் பெருமக்கள் இன்றும் தன் மண்ணறையில் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . லட்சோப லட்சம் மக்கள் இப்போதும் அந்நல்லோரின் கப்ருகளை தரிசித்துக் கொண்டிருக்கின்றார்கள் . இவர்களில் 70 பேர் பத்ருடைய ஸஹாபாக்களும் 300 பேர் பைஅத்துர் ரிழ்வானில் கலந்து கொண்டவர்களும் ஆவர் .
அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்கள்
ரஃஸுல் இஸ்லாம் , ரஃஸுல் அரப் , ஜும்ஜுமதுல் அரப் , ரும்ஹுலல்லாஹ் , கன்சூல் ஈமான் எனவும் ஹழ்ரத் ஸெய்யிதினா ஸஃத் இப்னு அபீவக்காஸ் رضي الله عنه அவர்களால் கன்ஸுல் ஈமான் , ஸைபுல்லாஹ் , ரும்ஹுல் இஸ்லாம் எனவும் புகழ்ந்து பேசப்பட்ட நகரமாகும் .
இன்னும் அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா அலீ كرم الله وجهه அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நகரமாகும் . இந்நகரம் பற்றி ஹதீதின் அமீருல்
முஃமீனின் என்று புகழப்பட்ட இமாம் புஹாரி رضي الله عنه அவர்கள் ,...
" நான் ஹதீதுக் கலையை கற்பதற்காக இருமுறை மிஸ்ருக்கும் , இருமுறை ஷாமுக்கும் ,இருமுறை ஜஸாயிருக்கும் பயணம் செய்த நான் ,நான்கு ஆண்டுகள் ஹிஜாஸிலும் வாழ்ந்திருக்கின்றேன் . ஆனால் கூபாவுக்கும் ,பகுதாதுக்கும் கணக்கிட முடியாத அளவுக்கு பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறுகின்றனர் ".
[ நூல் - ஹத்யுஸ் ஸாரி ,பக்கம் 478 ]
இவ்வாறே கூபாவில் வாழ்ந்த ஸெய்யிதினா இப்னு மஸ்வூத் رضي الله عنه அவர்களின் சபையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர் . ஒரு முறை தன்னை வரவேற்க வந்த கூட்டத்தை கண்ட அமீருல் முஃமீனின் ஸெய்யிதினா அலீ كرم الله وجهه அவர்கள் இப்னு
மஸ்வூதே ! உம்மால் இந்நகரம் அறிவின் சிகரமாகி விட்டதென்று சொன்னார்கள் .
காத்தமுன் நபியவர்களின் கண்மணித் தோழர் பெருமக்களில் ஆறு பேர் நீதிபதிகளாக திகழ்ந்தனர் . அதில் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பாரூக் , ஹழ்ரத் ஸெய்யிதினா உபை இப்னு கஃப் , ஹழ்ரத் ஸெய்யிதினா ஸைத் رضي الله عنهم ஆகியோர் மதீனா முனவ்வராவிலும் , ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் , ஹழ்ரத் ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் , ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ மூஸா அல் அஷ்அரி رضي الله عنهم ஆகியோர் கூபாவிலும் மிளிர்ந்தனர் என்கிறார்கள் ஹழ்ரத் ஷாஃபி رضي الله عنه அவர்கள் .
" இவ்வாறே ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பாரூக் , ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு மஸ்வூத் , ஹழ்ரத் ஸெய்யிதினா ஸைத் , ஹழ்ரத் ஸெய்யிதினா உபை இப்னு கஃப் ,ஹழ்ரத் ஸெய்யிதினா அபூதர்தா , ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் ஆகிய அறுவரையும் நபித்தோழர்களில் கல்வியின் ஊற்றுக் கண்ணாக கண்டேன் .
பின்னர் அவ்வூற்றுகள் ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் , ஹழ்ரத் ஸெய்யிதினா இப்னு மஸ்வூத் ஆகிய இருவரிடமும் ஒன்று சேர்ந்தது . அவ்விருவரின் கல்வியானது மதீனா முனவ்வராவிலிருந்து பெருக்கெடுத்து கூபாவில் மழையாகப் பொழிந்தது . அவ்விருவரின் பொருட்டால் கூபா முழுவதும் கல்வியால் பிரகாசித்தது என்கின்றனர் இமாம் மஸ்ரூக் رضي الله عنه அவர்கள் . "
[ நூல் -பித்னதேன் கா சர்சமீன் ]
அதற்கு மாறாக அந்த நபிமொழிக்கொப்ப நஜ்தை நாம் கணக்கில் கொண்டால் அங்கிருந்து அல்லாஹ்வின் விரோதியான இப்லீஸ் தான் காலத்திற்கேற்ப வெவ்வேறு வகையான உருவகங்களில் தோற்றமெடுத்தானே தவிர இஸ்லாத்தின் மகத்துவத்தை சுட்டிக் காட்டக்கூடிய எந்தவொரு நிகழ்ச்சியும் அங்கே நிகழ்ந்ததாக நமக்கு தெரியவில்லை . அதன்றி அப்பகுதியில் சில பெரியார்களின் கப்ருகள் இருந்தாலும் அவைகளையும் அங்குள்ளோர் உடைத்து தரைமட்டமாக்கி அவர்களின் சாபத்தையும் அவர்கள் தேடிக் கொண்டனர் .
அடுத்து அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் எமனுக்காகவும் ,ஷாமுக்காகவும் பிரார்த்தித்த பொழுது ஈராக்குக்காகவும் பிரார்தித்துள்ளனர் என்பதும் , ஈராக் தேசம் அல்லாஹ்வின் நேசர்கள் நிறைந்து காணப்படும் அருளுக்குரிய புண்ணிய பூமி என்பதும் தெளிவாக தெரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக இருப்பதால் ,இதற்கு மேலும் நபியவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நஜ்த் என்பது ஈராக் தான் என்று சொல்வீர்களாயின் அது சிலந்தி வீடு கட்டிய கதையாகத்தான் முடியும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் .
அத்துடன் வஹாபிய சிந்தனாவாதிகளின் இன்னொரு வாதத்தையும் உங்களின் மேலான விளக்கத்திற்கு தருகின்றோம் . ஏனெனில் அப்போதுதான் நீங்கள் எளிதாக இப்பிரச்சனையை விளங்கி கொள்ள முடியும் .
"எங்களுடைய நஜ்துக்கும் " என்னும் வாக்கியத்தை கொண்ட ஹதீதானது புஹாரி மற்றும் திர்மிதியில் பதிவாகியுள்ள ஒன்றாகும் .இதேபோல் முஸ்னத் அஹ்மதின் 5986 என்னும் இலக்கத்தில் பதிவாகி இருந்தாலும் , 5642 என்னும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீதில் "நஜ்தினா " என்னும் வாக்கியத்திற்குப் பதிலாக "வஃபீ மஷ்ரிகினா "- எங்களின் கிழக்குப் பகுதிக்காகவும் என்று கேட்கப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது .
எமன் என்றும் ஷாம் என்றும் இடங்களின் பெயரைச் சொல்லி நாயகம்
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் பிரார்த்தித்த பொழுது நஜ்த் என்னும் இடத்தின் பெயரைச் சொன்ன தோழர்கள் இச்சந்தர்ப்பத்தில் மஷ்ரிக் என்பதாக திசையை குறித்து சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும் . ஏனெனில் மதீனா முனவ்வராவிலிருந்து பலமுறை நபியவர்கள் கிழக்குத் திசையை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்தவை அனைத்துமே நஜ்தைக் குறித்துதான் சொல்லப்பட்டதென்பதை அத்தோழர்களின் வார்த்தை நமக்கு தெளிவாக்குகின்றது .
ஆம் .புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவின் நேர் கிழக்கே நஜ்த் தான் இடம் பெற்றுள்ளது . ஆனால் ஈராக் ஷிமால் -மேற்குப் பக்கமாக சாய்ந்து கிழக்கை நோக்கி அமைந்துள்ளது . அது மட்டுமின்றி எந்தெந்த இடங்களிலெல்லாம் நின்று அருமை நபியவர்கள் கிழக்குத் திசையை சுட்டிக் காட்டினார்களோ அவைகலையெல்லாம் நமது ஆய்வுக்கு உட்படுத்துவோமாயின் அது நஜ்தை நோக்கித்தான் திரும்புகின்றது .
இவை அனைத்தையும் விட மஷ்ரிக் என திசையை சுட்டிக் காட்டி சொன்னது நஜ்தை நோக்கித்தான் என்பதை அதே புஹாரி ,முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீதுகளே ஆதாரப்படுத்துவதை இங்கே பாருங்கள் .
" இங்கிருந்து தான் பிரச்சனைகள் உண்டாகும் என்று கிழக்குப் பிரதேசத்தை சுட்டிக்காட்டிய அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்
ஷைத்தானுடைய இரு கொம்புகளும் ரபீஆ மற்றும் முழருடைய இரு வம்சத்திலிருந்தே தோன்றும் எனக் கூறிய நபியவர்கள், அவ்விரு குடும்பத்தினர்களும் ஒட்டகம் மற்றும் மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் காணப்படும் வன்நெஞ்சமும் , வெறுப்புணர்வும் உடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார்கள் "
[ நூல் - புஹாரி ஷரீப் , கிதாபு பத்யில் கல்கி ]
புனித மார்க்கமான இஸ்லாத்தில் முஸ்லிம்களிடையே கருத்து மோதல்களும் , ஷைத்தானின் கொம்பும் இன்று சவூதி அரேபியாவின் தலைநகரமாகத் திகழும் ரியாத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நஜ்த்லிருந்து தான் தோன்றியது என்பதை மேற்கண்ட புஹாரி ,முஸ்லிமின் ஹதீதுகள் நமக்கு மிக அழகாக விளக்கி காட்டி விட்டது .
எப்படியென்று கேட்கிறீர்களா ? ஷைத்தானுடைய கொம்பும் , குழப்பங்களும் கிழக்குத் திசையில் ரபீஆ மற்றும் முழருடைய குடும்பத்திலிருந்து தான் வெளியாகும் எனக் கூறப்பட்டதல்லவா !அவ்விரு குடும்பத்தாரும் நஜ்த்வாசிகள் தான் .ஆதலால் நாம் இப்போது அவ்விரு குடும்பங்கள் தொடர்பாக ,அவர்கள் எங்கிருந்தார்கள் ? அதன்பின் அவர்கள் எங்கு சென்றார்கள் ? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம் .



No comments:
Post a Comment