Wednesday, 18 August 2021

வஹ்ஹாபியத் தோற்றம் - 1

ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M.இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத் رَحِمَهُ ٱللَّٰهُ

முகவுரை : 

இன்று இந்திய தேசிய இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் பல்வேறு குழப்பங்கள். விதவிதமான பெயர்களில் ஒருவகையான பிரிவினைவாத கூட்டங்கள் முஸ்லீம்களிடையே ஊடுருவி தத்தம் தங்களின் கொள்கைகள் தான் உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை காட்டித் தரும் வழி என ஒவ்வொருவரும் கூறிக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமியர்களைப் பிரித்து அவர்களின் ஒற்றுமைக்கு உலை வைத்து ஒரே கொள்கையின் கீழ் ஒருங்கிணைந்து ஒத்த கருத்துடையோராய் ,அணி திரண்டு நிற்கவேண்டிய முஸ்லீம்கள் இன்று பல்வேறு துண்டுகளாக ,கூட்டங்களாக சிதறிப்போய் அதற்குரிய காரணவாதிகள் யார்? 

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் உலகையே அரசோச்சிக் கொண்டிருந்த இஸ்லாமியர்களின் வீரம், சமயோசிதம், தொலைநோக்குப் பார்வை ,ஐக்கியமாக இணைந்து செயலாற்றுதல், மற்றும் மாற்று சமுதாய மக்களிடமும் மனிதாபிமானத்தோடு நல்லுறவு கொண்டிருந்த முஸ்லிம்களின் வளர்ச்சியைக் காண சகிக்காத உலகின் வல்லரசுகளான ரஷ்யா ,பிரான்ஸ் ,அமெரிக்க, பிரிட்டிஷ் போன்றவை முஸ்லிம்களின் வளர்ச்சியை ஒடுக்கிட ,நசுக்கியெறிய ஓரணியில் திரண்டன.

இதற்கான முஸ்லிம் நாடுகளுக்குள் லட்சக்கணக்கான உளவாளிகள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைப்பதற்காக வல்லரசுகளால் அனுப்பப்பட்டனர் .இருந்தும் முஸ்லிம்களிடையே பகைமைத் தூண்டி விட முடியவில்லை என்ற போது,...

தங்களின் கூட்டுச்சதியில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முஸ்லிம் மக்களிடையே இருந்த சில பணத்தாசை கொண்டவர்களும் ,உலக சுகத்தை தேடுவோரும் தேடப்பட்டனர். அவர்களின் தேடுதலில் அவர்களது லட்சியத்தை செயல் வடிவமாக்க அவர்களுக்கு கிடைத்தவர்கள் இருவர்.

அதில் ஒருவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். மற்றொருவர் அரபு மண்ணில் நஜ்துப் பிரதேசத்தில் தர்இயா என்னும் பகுதிக்கு அமீராக இருந்த முஹம்மத் பின் சவூத் .இவ்விருவரும் உலக வல்லரசுகள் இடம் சோரம் போனது மட்டுமில்லாமல், அவர்கள் வடிவமைத்துத் தந்த ஒரு கொள்கையை உலக முஸ்லிம்களுடன் இதுதான் ' உண்மையான இஸ்லாம் '  என்றும் கூறி அதனை செயல்படுத்த முனைந்த போது உலக முஸ்லிம்கள் அனைவரும் கொள்கையை முழுமையாக எதிர்த்தனர்.

விளைவு !  பிரிட்டிஷாரின் படைகள் இஸ்லாமியரது வேடத்திற்கு மாற்றப்பட்டு அப் படைகளின் துணையோடு மக்கா, மதீனா, தாயிப்,நஜஃப்,கர்பலா போன்ற பகுதிகளில் இருந்த இஸ்லாமிய சின்னங்கள் அனைத்தும் சிதைத்து எறியப்பட்டன. கஃபாவின் திரை கிழித்தெறியப்பட்டு,கஃபாவிற்கு அருகில் வாழ்ந்து வந்த முஸ்லிம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, கஃபாவுக்குள்  தவாஃப் செய்து கொண்டிருந்தவர்கள் கஃபாவிலேயே கண்டம்துண்டமாக வெட்டி எறியப் பட்டனர்.

அண்ணல் நபிகளாரின் குடும்பத்தாரது கப்ருகளும் நபித் தோழர்களின் கப்ருகளும், அக்கப்ருகளுக்கு மேல் கட்டப்பட்டிருந்த குப்பாக்களும் தகர்தெறியப்பட்டு , நபிகளாரின் புனித கப்ரின் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை கிழித்தெறியப்பட்ட ரவ்ழாவிற்கு மேல் கட்டப்பட்டிருந்த குப்பாவை துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தனர். மஸ்ஜிதுன் நபவியின் தூண்கள் இடிக்கப்பட்டு அங்கே பதிக்கப்பட்டு இருந்த வைர வைடூரியங்கள், யாகூத்து கற்கள் போன்றவையெல்லாம் பெயர்த்தெடுத்து நஜ்துக்குக் கொண்டு சென்றனர்.

இவை அனைத்தையும் முஸ்லிம் விரோத சக்திகளான யூத, கிறிஸ்தவர்கள் செய்து இருந்தால் அன்று இருந்த இஸ்லாமிய பேரரசான உஸ்மானிந ஆட்சியாளர்கள்  அவர்களை முறித்துப் போட்டு இருப்பார்கள் .ஆனால் முஸ்லிம்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்து இருந்த யூத கிறிஸ்தவர்களின் ஏஜென்டுகளான முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ,முஹம்மத் பின் சவூதியின் வம்சத்தினர் இம்மாபாதக கொடுமையை நிகழ்த்தினர் என்னும் செய்தி தான் அன்றைய இஸ்லாமிய உலகையே உலுக்கிற்று.

இன்னும் இந்தப் பதிவுகள் சவூதி மற்றும் வஹாபிய வம்சத்தாரின் அடாவடித்தனத்தை, அடக்குமுறையை கொடுங்கோன்மையை ,கொலைவெறித் தாண்டவத்தை ,நம்பிக்கைத் துரோகத்தை, நாசகாரச் செயலை ,அத்துமீறிய அராஜகத்தை உங்களுக்கு விளக்கிக் காட்டுவதுடன் பிரிட்டிஷ், அமெரிக்கா போன்ற இஸ்லாமிய விரோத சக்திகள் உடன் சவூதி அரசு கொண்டிருந்த உறவையும்,அவர்களுக்கு சவூதி வம்சம் தன்னை அடிமை சாசனப்படுத்தி கொடுத்த வரலாற்று உண்மைகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றது.

பதிவுகளைப் படிக்கும் வாசக பெருமக்கள் முஸ்லிம்களிடையே உள்ள, முஸ்லிம் விரோதிகளை இனங்கண்டு அவர்களை புரிந்து கொள்வதுடன் உண்மையான சத்திய இஸ்லாத்தின் தூய கொள்கைகளை புரிந்துகொள்ள இத்தளம் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.