Wednesday, 26 June 2019

தாருன் நத்வாவும் ஷைகு நஜ்தியும் -1

நபியவர்கள் அல்லாஹ்வின் ஆணைக்கினங்க மக்காவைச் சார்ந்த காபிர்களை ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கின்றனர் . அத்துடன் தான் ஒரு நபியே என தெளிவுபடுத்துகின்றார்கள் . அப்போது அவ்ர்களைப் போற்றி புகழ்ந்து வந்த நாவுகள் எல்லாம் தூற்றத் துவங்கிற்று . நபியவர்களை இம்சிக்க துவங்கினர் . இதனால் சொல்லணா துயரங்களுக்கும் , துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் . இறுதியில் மக்காவில் இனியும் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பொழுது ......

இதற்கிடையே இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருவதைக் கண்ட முஷ்ரிக்குகள் அந்த வளர்ச்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் குஸைமா பின் கிலாஃப் என்பானின் இல்லத்தில் ,உத்பா ,ஷைபா , அபூ ஸுஃப்யான் , துஅய்மை பின் அத்தி, ஹபீப் பின் முத்யிம்  , ஹாரிஸ் பின் அமிர், அபுல் புக்தரி பின் ஹிஷாம் , ரபீஆ பின் அஸ்வத் , ஹகீம் பின் ஹிஷாம் , அபூஜஹ்ல், நுபைஹ், உமைய்யா , முனப்பஹ் போன்ற தலைவர்களெல்லாம் ஒன்று திரண்டனர் .

  " அந்நாளை  யவ்முஸ் ஸஹ்மா என்று அழைக்கப்பட்டது . குரைஷித் தலைவர்களெல்லாம் ஒன்று திரண்டபின் அல்லாஹ்வின் விரோதியாகிய இப்லீஸ் மதிப்புக்குரிய ஒரு பெரியாரின் தோற்றத்தில் அவர்கள் திரண்டிருந்த வீட்டின் வாசல்படியில் வந்து நின்று கொண்டிருந்தான் . அவனைக் கண்ட குரைஷித் தலைவர்கள் ,யார் இந்த பெரியார் என்று வினவ ,நான் நஜ்தை சேர்ந்த பெரியார் என்றான் . அத்துடன் அவன் ,நீங்களெல்லாம் குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன் . அவ்விஷயத்தில் நீங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காகவும் , உங்கள் திட்டம் செயலற்று போய் விடக் கூடாது என்பதற்காகவும் தான் நான் வந்தேன் என்றான் . அதுகேட்ட குறைஷியர்கள் ,சரி அப்படியானால் உள்ளே வாரும் என்றழைக்க அவனும் உள்ளே வந்து அவர்களோடு சேர்ந்த கொண்டான்  .

இவ்வாறு மீண்டும் ஒருமுறை இப்லீஸ் நஜ்துடைய பெரியாரின் தோற்றத்தில் வருகை தந்து குரைஷிக் காபிர்களோடு இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கினர் .


' அப்போது அவர்களில் ஒருவன் ,அவரைக் கைது செய்து அறைக்குள் வைத்து  பூட்டி விடுவோம் என்றான் '.



"அதைக்கேட்ட நஜ்துடைய அந்த ஷெய்கு , அல்லாஹ்வின் மீதாணையாக இது சரியான முடிவல்ல என்றான் . அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அவரை கைது செய்து அடைப்பீர்களாயின்  அதற்குள் அவருடைய தோழர்கள் நீங்கள் மூடி வைத்த அவ்விஷயத்தின் வாயிலை அவர்கள் நிச்சயமாக வெளிப்படுத்தி விடுவார்கள் என்றும் சொன்னான் . "



" அதையடுத்து வேறொருவன் ,நாம் அவரை அவருடைய குடும்பத்தை விட்டு பிரித்து நாட்டை விட்டே கடத்தி விடுவோம் .அவர் நம்மை விட்டும் விலகிப் போய் விட்டால் அதன்பின் நாம் பயப்படத் தேவையில்லை . அவர் சம்பந்தமான எண்ணங்களும் நம்மைவிட்டு அகன்றுபோய் நாம் நிம்மதியாக நமது காரியங்களை கவனிக்கலாம் என்றான் ".


"இந்த யோசனையும் சரியல்ல என்று குறுக்கிட்ட நஜ்துடைய ஷெய்கு , நீங்கள் அவருடைய பேச்சில் இருக்கும் ஈர்ப்புச் சக்தியையும் ,  மனிதர்களின் உள்ளங்களில் அவருடைய பேச்சின் தாக்கத்தையும் இதுவரை பார்க்கவில்லையா என்ன ? அல்லாஹ்வின் மீதாணையாக அப்படியொருமுடிவை நீங்கள் எடுப்பீர்களாயின் அவர் அரேபியரின் வேறொரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு மத்தியில் பேசுவாராயின் அவரை அம்மக்கள் பின்தொடரும் விஷயத்தில் அச்சமற்று விட்டீர்களா ? என்று சொன்னான் ."

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான அபிப்பிராயங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது நஜ்துடைய ஷெய்கு குறுக்கிட்டு இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என ஒவ்வொன்றாக தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தான் . கடைசியாக அங்கே திரண்டிருந்தோரின் தலைவனாகிய அபூஜஹ்ல் அங்கிருந்தோரை நோக்கி ....


" அல்லாஹ்வின் மீதாணையாக அவர் சம்பந்தமாக என்னிடம் ஒரு ஆலோசனை உண்டு . உங்களில் யாருமே அதை  எடுத்துச் சொல்லவில்லை என்று சொல்ல ,அது என்ன ? என்று அனைவரும் கேட்க ,அதற்கவன் ; நாம் ஒவ்வொரு கூட்டத்தாரில் இருந்தும் தைரியமான பொறுப்புள்ள குடும்பத்தாருக்கு மிகவும் வேண்டிய வாலிபனை தேர்நதெடுப்போம் .அவர்களில் ஒவ்வொருவரிடமும் கூர்மையான வாட்களை கொடுத்து எல்லோரும் ஒரேநேரத்தில் சேர்ந்து அவரை வெட்டிக் கொல்வோம் . அப்போது தான் நிம்மதி பெற முடியும் . அதன்பின் அவரை கொன்றது எல்லோரும் தான் என்று கூறுவோம் . அந்நிலையில் அவருடைய குடும்பத்தாராகிய அப்து மனாபுடைய மக்கள் எல்லோரிடமும் சண்டையிட சக்தி பெற மாட்டார்கள் .அத்துடன் பனு அப்து மனாப்  அவரைக் கொன்றவனை கைது செய்வதையே விரும்புவர் . அதை நாமும் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினான் ".



"அவரைக் கொன்றேயாக வேண்டும் .அப்போதுதான் நாம் நிம்மதி அடைய முடியும் என்று அபூ ஜஹ்ல் சொன்னதும் இதுதான் சரியான முடிவு .இதைத் தவிர வேறு வழியே இல்லை .இதன் படியே செயல்படுவோம் என்றான் ஷெய்கு நஜ்தி . இக்கருத்தை எல்லோருமே  ஆமோதித்தனர்  .அதன்பின் அதை செயல்படுத்த அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர் ".

அருமை நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களை கொலை செய்வது தான் சரியான வழியென முடிவெடுத்த நஜ்திகள் அந்த நபியின் கப்ரை தரிசிப்பதற்காக பயணம் செய்வதை மட்டும் நன்மையான காரியமென எப்படிச் சொல்வார்கள் ? இவர்கள் நபியவர்களின் பரமவிரோதிகளாதலால் அவர்களின் அகமியங்களையும் ,எதார்த்தங்களையும் பேசுவதை விட கசப்பான ஒன்று அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன ?

மேலும் காபிர்கள் ஒன்று கூடி நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم   அவர்கள் சம்பந்தமாக செய்த சதி ஆலோசனையை அல்லாஹ் சொல்லிக் காட்டும் போது ...


"நபியே ! உம்மை சிறைபிடிக்கவோ ,உம்மை கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு ) வெளியேற்றவோ நிராகரிப்போர் சதி செய்வதை நினைவு கூறுவீராக  .அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் . அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக மறைவாக திட்டமிட்டு கொண்டிருந்தான் ". 
[ அல் குர்ஆன் , சூறா அன்பால் , வசனம் 30 ] 

 காபிர்கள் தங்கள் ஆலோசனைப்படி அருமை நபியவர்களை கொலை செய்யும் திட்டத்தோடு புறப்பட்டதை வல்லோனாம் அல்லாஹ் தனது ஹபீபுக்கு இவ்வாறு அறிவித்து தருகின்றான் .



"ஹழ்ரத் ஜிப்ரீல் عليه السلام அவர்கள் முஹம்மது முஸ்தபா عليه الصلاة والسلام அவர்களிடம் வருகை தந்து நபியவர்கள் வழமையாக ஓய்வெடுக்கும் படுக்கையில் இரவு தங்க வேண்டாம் என்கின்றனர் . (அறிவிப்பாளர் கூறுகின்றார் ) அன்றிரவு நடுநிசியில் எதிரிகள் நபியவர்களின் இல்லத்தை சூழ்ந்து கொண்டனர் . அதாவது நபியவர்கள் உறங்கியதும் அவர்கள் மீது படையெடுக்க காத்திருந்தனர் . அல்லாஹ்வின் கட்டளைப்படி காபிர்களின் நடவடிக்கையை கண்ணுற்ற நாயகம் அவர்கள் தமது விரிப்பில் ஹழ்ரத் அலீயவர்களை உறங்கச் செய்து தமது போர்வையை எடுத்து போர்த்திக் கொள்ளுமாறு சொன்னார்கள் . அவ்வாறு போர்த்திக் கொண்டால் எதிரிகளிடமிருந்து எவ்வித தீங்குகளும் நேராது . ஏனெனில் நாயகம் عليه الصلاة والسلام அவர்கள் அப்போர்வையில் தான் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர்கள் எண்ணிக் கொள்வார்கள் "

அதன்பின் அல்லாஹ்வின் உதவியோடு நாயகம் عليه الصلاة والسلام அவர்கள்  அங்கிருந்து புறப்படுகின்றார்கள் .





   






Monday, 24 June 2019

ஷைகுன் நஜ்தின் தோற்றம்

அருமை நாயகம் முஹம்மது صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவனியில் மனித கோலம் கொண்டு வெளியாகி தனது 35வது வயதை எட்டிய பொழுது குறைஷிகளால் கஃபா புனர் நிர்மாணம் செய்யப்பட்டது .

Hajar al-Aswad

அப்போது கட்டிட வேலைகளெல்லாம் பூர்த்தியானதும் சுவர்கத்தில்  இருந்து இறக்கப்பட்ட ஹஜ்ருல் அஸ்வத் கல்லை வைப்பது யார் என்னும் பிரச்சினையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இறுதியில் அல் அமீனாகிய அண்ணல் நபி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களே தங்களது புனிதமிகு திருக்கரத்தால் அதை வைக்க வேண்டுமென குறைஷிகள் முடிவெடுத்தனர் . அப்போது ......



' அல்லாஹ்வின் விரோதியாகிய இப்லீஸ் நஜ்த் தேசத்துடைய பெரியாரின் தோற்றத்தில் அச்சபையில் இருந்தான் . (அப்போது மக்காவைச் சார்ந்தோரில் முஹம்மது صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களே சிறந்தவர்களென அனைவராலும் கணிக்கப்பட்டதால் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது ) .ஆனால் அதை சகித்துக் கொள்ள முடியாத இப்லீஸ் உரத்தக் குரலில் சப்தமிட்டு , குறைஷிகளே ! உங்களில் மதிப்புக் குறியவர்கள் எல்லாம் இருக்கும் பொழுது ஒரு யத்தீமான சிறுவன் அக்கல்லை வைப்பதற்கு முடிவு செய்துள்ளீர்களே ! இம்முடிவு நல்லதல்ல . இவர் உங்களிடையே பிரச்சனைகளை தோற்றுவிப்பார் ' என்று சொன்னான் .

[நூல் - ஸீரத்துன் நபவிய்யா இப்னு ஹிஷாம் , அர்ரெளழுல்  உல்ப் , பாகம் 1, பக்கம் 346 , 2:307 ] 

அரபு மண்ணில் அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள்  ஏகத்துவ கொள்கையை வெளிப்படுத்துவதற்காக அம்மக்களில் ஒருவராக அனுப்பப்பட்டிருந்ததோடு , அங்கிருந்த அனைவராலும் மதிக்கதக்க ஒருவராக , போற்றப்படும் புண்ணியராக இருந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சியாகும் இது . அந்த சந்தர்ப்பதில் கூட இப்லீஸ் நஜ்துடைய ஒரு பெரியாரின் தோற்றத்தில் வருகை தந்து ...


மக்கத்து குறைஷிகள் அவரை நம்பிக்கையாளர் என்றும் , உண்மையாளர் என்று ஏற்றுக் கொண்டாலும் கூட நஜ்த் வாசிகள் அதற்கு மாற்றமான எண்ணமுடையோர் தான் என்பதை அப்போதே தெளிவுபடுத்தினான் .

அத்துடன் நஜ்த் வாசிகள் தனது சகாக்கள் தான்  என்பதையும் ஷைத்தான் தெரிந்து வைத்திருந்தான் . அதனால் தான் அப்பகுதியைச் சார்ந்த மக்களின் அபிப்பிராயம் என்னவென்பதையும் அவன் தெளிவுபடுத்தினான் .

இன்னும் நபியவர்கள் நம்பிக்கையாளர் ,உண்மையாளர் என்பதை குரைஷிக் காபிர்கள் ஏற்றுக் கொண்ட பிறகும் கூட அவ்வாறு நம்பிக்கை கொள்ள நஜ்த்வாசிகள் தயாராக  இல்லை என்றால் அவர்கள் நபியவர்களின் எதார்த்தத்தை ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என்பதையும் அவர்களின் தலைவனான ஷைத்தான் தெளிவு படுத்தி விட்டதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .


Friday, 21 June 2019

கிழக்குத் திசையிலுள்ள நஜ்த் மாகாணம்

கண்மணி நாயகம் <அவர்களால் கிழக்குத் திசையில் இருந்து தோன்றும் கர்னுஷ் ஷைத்தான் என்று எச்சரிக்கப்பட்ட அந்த கூட்டம் ,எந்த பெயரை கொண்ட கூட்டத்தினரை முன்மாதிரியாகக் கொண்ட கூட்டம் என்பதையும் , கிழக்குப் பிரதேசத்தின் எந்த ஊரிலிருந்து அது தோன்றியது என்பதையும் அடுத்து வரும் ஹதீஸ் நமக்கு துல்லியமாக காட்டுகிறது .




<"ஹழ்ரத் ஷரீக் இப்னு ஷிஹாப் رضي الله عنه  அவர்கள் கூறுகின்றனர் . அருமை நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களில் யாரையாவது சந்தித்து கவாரிஜியாக்களைப் பற்றி கேட்க வேண்டுமென ஆவல் கொண்டிருந்தேன் . அது அரஃபா உடைய தினத்தன்று அபூ ஸூர்ஆ என்ற நபித்தோழரைச் சந்திந்த பொழுது நிவர்த்தியாயிற்று . நான் அவரிடம்  கவாரிஜியாக்களைப் பற்றி அருமை நாயகம் ﷺ அவர்கள் கூறியுள்ளதை எனக்கு சொல்லித் தாருங்கள் என்று கேட்டேன் . அதற்கவர் ;எனது இரு செவிப்புலன்கள் கேட்டதையும் இரு கண்கள் கண்டதையும் கூறுகின்றேன் என்று சொல்லி கூற  துவங்கினார் .

ஒருமுறை நாயகம் ﷺ அவர்களிடம் ஒப்படைக்கப்பெற்ற திர்ஹங்கள் சிலவற்றை நபியவர்கள் பங்கீடு செய்து கொண்டிருந்தனர் . அப்போது அங்கே அமர்ந்து இருந்தவர்களில் கருப்பு நிறமும் ,தலைமுடி பின்னப்பட்டிருந்தவரும் ,வெண்மையான ஆடை அணிந்தவரும் ,இரு கண்களுக்கிடையில் ஸுஜூது உடைய அடையாளத்தை கொண்டிருந்தவருமாகிய ஒருவர் நபியவர்களை நாலாபுறமும் சுற்றி வந்தவராக தனக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் சென்று பார்த்தார் . எதுவும் கிடைக்கவில்லை . அதனால் அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவராக நபியவர்களின் திருப்பெயரை சொல்லி அழைத்து , நீர் நீதமாக பங்கீடு செய்யவில்லை என்று கூறினார் .


அதுகேட்ட நபியவர்கள் சினம் கொண்டவராக எனக்குப் பின் என்னை விட நீதமாக பங்கீடு செய்யும் ஒருவரை பெற்றுக்கொள்ளவே மாட்டீர்கள் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மூன்று முறை சொல்லிவிட்டு ,


கிழக்குப் பிரதேசத்தில் இருந்து இவனைப் போல பலர் தோன்றுவார்கள் . இவனும் அவர்களில் நின்றுமுள்ளவன் தான் . அவர்கள் குரானை ஓதுவார்கள் ,அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . வில்லில் இருந்து விரைந்தோடும்  அம்பு  போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் . பின்னும் வில்லை விட்டு வெளியேறிய அம்பு எவ்வாறு மீண்டும் வில்லுக்குத் திரும்பாதோ அவ்வாறு அவர்கள் மார்க்கத்திற்கு திரும்ப மாட்டார்கள் எனக் கூறியவர்கள் ,தங்களின் முபாரக்கான திருக்கரத்தை தங்களின் முபாரக்கான நெஞ்சின் மீது வைத்தவர்களாக அவர்களின் அடையாளம் தலையை சிரைப்பதாம் .அவர்களில் இறுதியானவன் தஜ்ஜாலுடன் இணையும் வரை தோன்றிக் கொண்டே இருப்பார்கள் . அவர்களை நீங்கள் சந்திப்பீர்களேயானால் கொன்று விடுங்கள் . ஏனெனில் அவர்கள் பிறவியிலேயே மிகக் கொடியவர்கள் என்று மூன்று முறை மொழிந்தார்கள் "

[ நூல் - முஸ்னத் அஹ்மத் ,பாகம் 6,பக்கம் 662. முஸ்னத் தயாலிஸி ,என் -923. நஸாயீ குப்ரா ,பாகம் 2,பக்கம் 312 ,எண் 3566 ] 



ஆக இதுவரை எடுத்துக் காட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நவீனமாக தோன்றும் கொள்கைப் பிரச்சனைகள் அனைத்தும் புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவின் கிழக்குப் பகுதியில் இருந்து தான் தோன்றும் என்பதை தெளிவுபடுத்தியதோடு ,இப்படியெல்லாம் எச்சரிக்கை நபியவர்களின் திருச்சபையில் தனது சுய லாபத்திற்காக கலிமா சொல்லி உள்ளுக்குள்ளேயே அல்லாஹ் ரஸூலின் விரோதியாக இருந் ஒருவன்தான் காரணம்  என்பதையும் ,அவனும் கிழக்குப் பிரதேசத்தை சேர்ந்தவனாகத் தான் இருந்தான் என்பதையும் என்பதையும் மிகத் துல்லியமாக நமக்கு விளக்கி காட்டுகிறது .

இதில் புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவிற்கு கிழக்குப் பிரதேசத்தை நாம் ஆய்வுக்கு எடுப்போமேயானால் அரபு மண்ணில் ஒரேயொரு மாகாணத்தை தவிர மற்ற பகுதிகளில் வாழ்ந்த ஜனங்களில் ஒருவர் கூட நபிகள் நாயகம் ﷺ  அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருக்கவில்லை என்பது புத்தியுள்ளோர் புரிந்து கொண்டுள்ள ஒன்றாகும் .

இவ்வாறே நபிகள் நாயகம் ﷺ அவர்களை தம் முகக் கண்ணால் காணும் பாக்கியம் பெற்ற அரபுப் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த அந்த ஒரேயொரு மாகாணத்தில் தோன்றிய பிரச்சினை தான் இன்றும் அந்த மாகாணத்தை முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வருவதை'நாம் பார்க்கலாம் .இப்படி ஒரு பாதிப்பு ஏற்படும் என்று தான் வள்ளல் நபி ﷺ  அவர்கள் அப்போதே பல்வேறு வகையிலும் நம்மை எச்சரித்தார்கள் .

பிரச்சினை உண்டாக்கிய அந்த மூலப் பிரதேசம் ,அதை ஒட்டியுள்ள பிற பகுதிகளையும் பாதித்ததோடு புதுப் புதுவகையான குழப்பங்களையும் எதிர்கொள்ள வைத்தென்பதை நாம் மறுக்க இயலாது .அதற்காக பாதிப்பின் தாக்கத்தை கொண்டிருந்த பிற பகுதிகளையெல்லாம் குழப்பத்தின் பிரதேசங்களாக சிலர் பிரகடனப் படுத்துவது மாபெரும் தவறாகும் .

மேலும் நாம் உங்களோடு  பகிர்ந்து கொள்ள விரும்பும் விஷயம் என்னவெனில் ,இஸ்லாத்தின் துவக்க காலம் தொட்டு இன்றுவரை உள்ள கொள்கை விளக்க பிரச்சனைக்கெல்லாம் அடித்தளமாக எந்த இடம் அமைந்திருந்தது என்பதை தெளிவு படுத்துவதேயாகும் .அருமை நபியவர்களின் பின்வரும் ஹதீதை பாருங்கள்.


                                      






ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்கள் நபிகள் நாயகம் ﷺ  அவர்களின் திருச் சமூகத்திற்கு சிறிது தங்கத்தை அனுப்பி வைத்தனர் . அதை நபியவர்கள் (1) அக்ரஃ  பின் ஹாபிஸ்  (2) உயைனா பின் பத்ர் (3) ஸைத் அத்தாயி (4) அல்கமா பின் உலாஸா அல் அமிரிய்யு என்னும் நான்கு குழுவினருக்கும் பங்கீடு செய்தார்கள் .அதனால் குறைஷிகளும் ,அன்சாரிகளும் எங்களுக்கு தராமல் நஜ்த்உடைய பகுதியை சார்ந்த தலைவர்களுக்கே பங்கீடு செய்து விட்டீர்களே என்றனர் .அதுகேட்ட நபியவர்கள் :நஜ்த்உடைய பெரியவர்களின் உள்ளங்கைகளை சந்தோஷப்படுத்தி அவ்ர்களைக் கவர வேண்டுமென்னும் நோக்கத்தில் தான் அவ்வாறு செய்தேன் என்றார்கள் .

அப்போது குழிவிழுந்த கண்களையுடைய ,உயந்த நெற்றியுள்ள ,கன்னம் தடித்த ,அடர்த்தியான தாடியைக் கொண்ட ,தலைமுடியை சிரைத்த ஒருவன் ,முஹம்மதே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அல்லாஹ்வை அஞ்சும் என்றான் .அதுகேட்ட நபியவர்கள் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் அல்லாஹ்வுக்கும் வழிபடுபவர் வேறு யார் என்றும் ,இப்பூமியிலுள்ள அனைவருக்கும் அல்லாஹ் என்னை நம்பிக்கையாளனாக அனுப்பி இருக்கும் பொழுது நீர் என்னை நம்பிக்கையாளனாக ஏற்கவில்லையா  ? என்று சொல்ல அருகில் இருந்த ஹழ்ரத் காலித் பின் வலீத்'رضي الله عنه  அவர்கள் அவனைக் கொள்வதற்கு அனுமதி கோர நபியவர்கள் தடுத்து விட்டார்கள் .

அதன்பின் அவன் அவ்விடத்தை விட்டு சென்ற பின் நபியவர்கள் , ' இவனுடைய வம்சத்தில் இருந்து ஒரு கூட்டம் தோன்றும் , அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள் . ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது . வில்லில் இருந்து வெளியாகும் அம்பைப் போல் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் .  மேலும் அவர்கள் விக்ரஹத் தொழும்பர்களை விட்டு விடுவார்கள் . முஸ்லிமகளை கொலை செய்வார்கள் . அவர்களை ஒருவேளை நான் சந்திப்பேனாயின் ஆதுடைய சமூகத்தார் கொல்லப்பட்டதைப் போன்று அவர்களைக் கொல்வேன்  '' என்றனர் .

[ நூல்  - புஹாரி ஷரீப் .பாகம் 2 , பக்கம் 645 . முஸ்லீம் ஷரிப் , கிதாபுஸ் ஸகாத், பாபு திக்ரில் கவாரிஜி , இக்மால்  ,பாகம் 3 , பக்கம் -606 ] 

கொடியோர்களான க்வாரிஜிய்யீன்கள் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நஜ்த் மாகாணத்தில் இருந்து தான் வெளிப்படுவார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழி நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டி விட்டது .

அத்துடன் நஜ்த் என்பது அரபுப் பிரதேச மாகாணங்களில் ஒன்றென்பதையும் ,அம்மாகாணத்தை சார்ந்தவர்களில் நாயகம் 
 ﷺ  அவர்களின் திருக்கரத்தை பற்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்களும் இருக்கத்தான் செய்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்கின்றோம் .

அதன்றி நஜ்த் மாகாணமும் அங்கே வாழ்ந்த மக்களும் பல்வேறு பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும்  . அங்கிருந்து தான்  க்வாரிஜிய்யீன்கள்  என்போர் தோன்றுவார்கள் என்பதெல்லாம் நாயகம் ﷺ  அவர்களுக்கு தெரிந்து இருந்ததால் தான் அப்பகுதியைச் சேர்ந்த தலைவர்களை சந்தோஷப்படுத்தி ,அவர்களோடு ஓர் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டால்   அடுத்து வரப்போகும் பிரச்சனைகள் சிறிது தளர்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்னும் ஆதங்கத்தில் தான் தனது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த குறைஷிகளுக்கும் ,அன்சாரிகளுக்கும் அப்பொருளை பங்கிடாமல் நஜ்துடைய தலைவர்களுக்கு பங்கீடு செய்தார்கள் கண்மணி நாயகம்   ﷺ  அவர்கள் .

இதைக் கண்ணுற்ற அவன் , நஜ்தை சேர்ந்த மக்கள் நம்பிக்குரிய நன்மக்களாக ,அல்லாஹ் ரஸுலுடைய திருப்பொருத்தத்தை பெற்றவர்களாக மாறுவதை விரும்பாததால் ,நபியவர்களை அவமதிக்கும் நோக்கில் அவர்களை பெயர் சொல்லி அழைத்து உங்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை . ஆகையால் நீங்கள் எல்லோருக்கும் பங்கீடு செய்யுங்கள் என்று சூசகமாகச் சொன்னான் . ஏனெனில் அவனும் ஒரு நஜ்த் வாசியாக இருந்ததே .

எனவே நஜ்த் மாகாணம் தான் பிரச்சனைகள் அனைத்துக்கும் தலைமை கேந்திரமாகும் . இதுதான் வழிகேட்டின் மர்கஸ் ஆகும் . இங்கிருந்து தோன்றிய அடிப்படைக்குரிய பிரச்சனைகள் காலப்போக்கில் அதன் அருகாமையில் இருந்த ஈராக்கில் ஒருபெரும் பேராபத்தை உண்டாக்கியது . ஈராக்கில் அன்று ஏற்பட்ட பிரச்னைகளுக்கு நஜ்த் தான் அடித்தளம் இட்டதென்பதை    மூடி மறைக்க இன்று ஒரு கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது . காரணம் உண்மையை மூடி மறைப்பதென்பது தான் இவர்களின் பிறவிக் குணமாகும் .

அருமை நாயகம்  ﷺ  அவர்களின் திருக்கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றவர்களில் நஜ்த் பகுதியை சேர்ந்தவர்களும் இருந்தனர் . அவர்களும்  
க்வான்களது வெளிப்பாடு , குப்ரின் தலைமைப் பீடம் , குழப்பங்களின் மர்கஸ் , ஷைத்தானின் கொம்பு போன்றவை வெளிப்படப் போகும் இடம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நஜ்த் தான் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தனர் . அத்துடன் அதற்கான காரணங்களையும் அவர்க;
புரிந்து கொண்டிருந்தனர் .

அது மட்டுமா ! புனித இஸ்லாம் அரபு  மண்ணில்  வேரூன்றுவதற்கு முன்பும் ,பின்பும் நஜ்துடைய பகுதியில் பிரச்சனைகள் தொடர்ச்சியாக காணப்பட்டதையும் , அத்துடன் நஜ்த் அருமை நாயகம் ﷺ  அவர்களது வெறுப்புக்கு இலக்காகிப் போனதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் .

இத்தனைக்குப் பிறகும் அப்பிரதேசம் நல்லோர்கள் வாழும் இடமாக மாற வேண்டுமென்னும் மேலான எண்ணத்தில் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை அடுத்து வரும் நாயகம் ﷺ  அவர்களது அமுதவாக்கு எத்துணை அருமையாக விபரிக்கின்றது என்று பாருங்கள் 


  
"யா அல்லாஹ் ! எங்களின் ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத்துச் செய்வாயாக என ஏந்தல் நபி ﷺ  அவர்கள்  பிரார்த்தித்தனர் . அப்போது அங்கிருந்த தோழர்களில் ஒருவர் ,எங்களின் நஜ்துக்கும் ( அவர் அப்பகுதியை சேர்ந்தவர் ) என்று சொல்ல , நபியவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக  ஷாமுக்கும் ,எமனுக்கும் பிரார்த்திக்க  ,அவர் மீண்டும் எங்கள் நஜ்துக்கும் என்று சொல்ல , நபியவர்கள் மீண்டும் முன்றாவது முறையாக  ஷாமுக்கும் ,எமனுக்கும் பிரார்த்திக்க  , அவர் மீண்டும் நபியவர்களிடம் <>எங்கள் நஜ்துக்கும் என்று சொல்ல , அது கேட்ட நபியவர்கள் ,அங்கிருந்து தான் குழப்பங்களும் ,பூகம்பங்களும் ,ஷைத்தானுடைய கொம்பும் உதயமாகும் என்று சொன்னார்கள் "

[நூல் - புஹாரி ,திர்மிதி ] 

இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கும் சிலர்  நஜ்தில் வெறும் குழப்பம் மட்டுமே தோன்றும் எனக்கூறி உண்மையை மறைக்கப் பார்க்கின்றனர் .  இது தவறாகும் .மாறாக இப்போதும் கூட நஜ்தில் பிரச்சனைகளும் ,குழப்பங்களும் இருப்பதாகத்தான் நபிகள் நாயகம்  ﷺ  அவர்கள் கூறுகின்றனர் . ஆதலால் அது எப்படிப்பட்ட பிரச்சனைகளை அப்போதே  சந்தித்து கொண்டிருந்தது என்பதை  அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம் .