Wednesday, 10 July 2019

நஜ்தும் அதன் பொருளும் - 2

இதன்படி இந்திய தேசத்திலிருந்து தோன்றிய மவ்லவி இல்யாஸின் படைப்பிரிவும் , பாகிஸ்தானிலிருந்து தோன்றிய ஜமாத்தே இஸ்லாமி இயக்கமென்னும் படைப்பிரிவும் நஜ்திலிருந்து தோன்றிய ஷைத்தானின் படைப்பிரிவேயாகும் .

இவ்வையகம் மட்டுமல்ல .அல்லாஹ்வின் எதார்த்தம் வெளிப்படுவதற்கும் காரணகர்த்தாவான நமக்கெல்லாம் உயிர்நாடியான உத்தம திருத்தூதர் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّ  அவர்கள் மக்கத்து மண்ணில் ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் முன் அம்மக்கள் மத்தியில் சிறந்ததோர் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போது நபியவர்களின் விஷயத்தில் பிளவை ஏற்படுத்த முயன்ற அல்லாஹ்வின் விரோதியான இப்லீஸ் எடுத்த தோற்றமானது நஜ்தியத் தோற்றம் தான் .

அதன்பின் அண்ணல் நபி  صَلّى اللهُ عليهِ واٰله وسلّ  அவர்களை கொலை செய்ய வேண்டுமென்ற அபூஜஹ்லுடைய முடிவை பாராட்டி அவ்வாறே செயல்பட தூண்டியவன் எடுத்திருந்த தோற்றமும் நஜ்தியத் தோற்றம் தான் .


அதன்பின் நஜ்துவாசிகளை இஸ்லாத்தின் பக்கமாக அழைப்பதற்காக எழுபது தோழர் பெருமக்களை அழைத்துச் சென்று அவர்களை அனைவரையும் கொலை செய்ததும் நஜ்திகள் தான் .

அதன்பின் அல்லாஹ்வின் தூதராகிய அருமை நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّ  அவர்களின் காலத்திலேயே தோன்றி தானும் ஒரு நபிதான் என்று வாதிட்ட முஸைலமத்துல் கத்தாப் நஜ்தை சேர்ந்தவன் தான் .

பின்னர் இங்கு ஆரம்ப பதிவுகளில் எடுத்துக் காட்டப்பட்ட நபிமொழிகள் அனைத்துக்கும் எதார்த்தமான சொந்தக்காரராகளாகிய கவாரிஜிய்யீன்களின்  தோற்றத்துக்குரிய இடமும் நஜ்த் தான் .

இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக எல்லா பிரச்சனைகளுக்கும் அடித்தளமாக , மூளையாக ,மூலஸ்தானமாக , ஆணிவேராக நஜ்துப் பிரதேசம் தான் அமைந்திருந்தது என்பதை ஹதீதுகளும் , வரலாற்றுக் கிரந்தங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்ற பேருண்மைகளாகும் .

ஒரு குறிப்பிட்ட பகுதியின் மூலையில் முடங்கிக் கிடந்த நஜ்தியப்  பிரச்சனைகள் காலபோக்கில் உலகமனைத்தையும் ஆட்டிக் படைக்கலாயிற்று . இதில் நஜ்திகளால் தூண்டி விடப்பட்ட அபிப்பிரச்னை முதன் முதலாக எதிரொலித்த இடம் ஈராக் ஆகும் .

ஆம் . நஜ்துப் பிரதேசத்தின் கீழ்ப் பகுதி எல்லையில் அமைந்த ஈராக் நாட்டை சார்ந்த கூபா ,பஸரா போன்ற மாவட்டங்களையெல்லாம் ஆட்டிப் படைத்தது .

ஈராக்கில் தான் முக்கியமான அப்பிரச்னைகள் எல்லாம் தோன்றிற்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை . ஆனால் அதற்காக நபியவர்களால் சொல்லப்பட்ட அருள்வாக்கை ஈராக்கை நோக்கி திருப்புவது வேண்டுமென்றே செய்கின்ற சதியாகும் .

மேலும் ஈராக் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّ  அவர்களின் பிரார்த்தனைக்கு இலக்கு ஆகாததால் தான் அந்நாட்டில் பெரும் பெரும் பிரச்சனைகள் எல்லாம் தலை தூக்கிற்று என்று குற்றஞ்சாட்டும் எதிர்தரப்பாரின் கருத்தை ஒரு பேச்சுக்கு நாம் ஏற்றுக் கொண்டாலும் அல்லாஹ்வின் அருட்பார்வை நிரம்பிய பூமியும் ,அண்ணல் நபியவர்களுக்கு மிகவும் உவப்பான நகரமுமாகிய முஃமின்களின் தலைநகராமான மதீனா முனவ்வராவில் இறுதிநாள் தோன்றி விட்டதோ என்று எண்ணுமளவுக்கு ஹர்ராவுடைய நிகழ்ச்சி நடைபெற்றதா இல்லையா ?

உலகில் நாம் அறிந்தவரை இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததாக வேறு எங்குமே வரலாறே இல்லையே ?   அந்த அளவுக்கு மனித உள்ளங்களை உலுப்பிய நிகழ்வு அது . இது மட்டுமா ! அப்புனித பூமியில் நயவஞ்சகர்களின் பிரச்சனை . இப்னு ஸய்யாத்தின் பிரச்சனை . அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உஸ்மான் رضي الله عنه அவர்களின் ஆட்சிக்கெதிரான குரல் . அவர்கள் மீதான படையெடுப்பு . இறுதியில் அவர்கள் கொலை செய்யப்பட்டது என எத்தனையோ பிரச்சனைகள் அங்கே தோன்றின . அவைகளையெல்லாம் காரணமாக கொண்டு புண்ணிய பூமியான மதீனாவை குழப்பங்களின் தலைமை பீடம் என்று சொல்லலாமா ?

இதேபோல புனித மக்காவை எடுத்துக் பாருங்கள் .அதன் வரலாற்றை எடுத்துப்  பாருங்கள் .   பதிமூன்று ஆண்டுகளாக நபியவர்களுக்கு சொல்லணா துயரங்கள் ,துன்பங்கள் அநியாயங்கள் இழைக்கப்பட்டன .
நபியவர்களும் ,அவர்களது அருமை தோழர்களும் அவர்கள் பிறந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர் . சுமார் 22 வருடங்களாக அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்த சுவர்க்க லோகத்தின் கல்லான ஹஜ்ருல் அஸ்வத் என்னும் கல் அகற்றப் பட்டு அநீதம் அழைக்கப்பட்டது. 

மக்காவில் தோன்றிய அப்பிரச்சனைகளை எல்லாம் காரணம்காட்டி மக்காவை குழப்பங்களின் மத்தியஸ்தலம் என்று சொல்லலாமா ? ஆனால் இதற்கு மாறாக இன்றும் கூட அந்நகரை புண்ணிய பூமியென்றும் ,தலைமைப்பீடம் என்றும் தானே சொல்லிக் கொண்டிருக்கின்றோம் .

இவ்வாறு எந்த ஊரை ,எந்த தேசத்தை ,எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் அவைகளும் ஏதோவோர் பிரச்சனையை எதிர் கொள்ளக் கூடிய நிலையிலே  இருப்பதை நாம் பார்க்கலாம் .  ஆனால் அப்பிரச்சனையை காரணம் காட்டி தீர்ப்பு சொல்வதானால் மேற்கண்ட இரு புண்ணிய பூமிகளும் கூட இத்தாக்குதலில் இருந்து தப்பாது . பின்னும் பிரச்சனைகளை காரணமாக்கி தீர்ப்பு சொல்வதும் நமது நோக்கமல்ல . மாறாக அங்கெல்லாம் அப்பிரச்சனைகள் தோன்றியதன் காரணமென்ன ? அதைத் தூண்டியவர் யார் ? என்பதை வெளிக்கொண்டுவந்து உங்களின் பார்வைக்கு தருவதே நமது நோக்கம் .

இந்த அடிப்படையில் நாம் பார்க்கும் போது இஸ்லாத்திற்கும் , இஸ்லாமியர்களுக்கும் விரோதி அல்லாஹ் மற்றும் அவனது றஸூலுக்கும் விரோதி ஷைத்தான் தான் . அவன் இந்த உம்மத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் , பிரச்சனைகளை உருவாக்கவும் எடுத்துக் கொண்ட வேஷம் நாதர் நபியவர்களின் நபிமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்ட , நபியவர்களாலேயே எனது தோழர்களின் விஷயத்தில் நான் பயப்படுகின்றேன் என்று சொல்லப்பட்ட நஜ்த்துவாசிகளின் தோற்றமே ஆகும் .

ஆம் ! பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன் இப்லீஸ் என்பதைப் போல் , ஊர்கள் , பகுதிகள் , தேசங்கள் ரீதியாக வைத்துப் பார்க்கும் போது அது நஜ்தாக - ரியாத்தாகத்தான் இன்றும்  இருந்து கொண்டுள்ளது  . 

எனவே மேற்குறிப்பிடப்பட்டநபிமொழிகளில் நஜ்த் என்ற சொல் தெளிவாக சொல்லப்பட்ட பிறகும் அது அரேபிய மாநிலத்தில் உள்ள நஜ்த் அல்ல . மாறாக திடல் பூமியான ஈராக் தான் என்று வாதிப்போர் ,ஈராக்கில் தோன்றிய பிரச்சனைகளையெல்லாம் பட்டியலிட்டு காட்டுகின்றனர் . ஆதலால் அப்பிரச்சனைகளையும் ,அதற்குரிய விளக்கங்களையும் இப்பொது பார்ப்போம் . 

1 -  ஹழ்ரத் ஸெய்யிதினா உஸ்மான் رضي الله عنه அவர்கள் பற்றிய பிரச்சனை ஈராக்கில் இருந்துதான் ஆரம்பமாயிற்று .

இது வீண் பழியாகும் . ஏனெனில் இப்பிரச்சனை அப்துல்லாஹ் இப்னு ஸஃத் இப்னு அபீ சுர்ஹ் என்பவனைக் கொண்டு உருவான பிரச்சனையாகும் . இவன் மிஸ்ரை சேர்ந்தவனாதலால் இப்பிரச்சனை மிஸ்ரிலிருந்து தான் தோன்றிற்று . இப்பிரச்னையில் எதிர் வாதியாக இருந்தவர் ஹழ்ரத் ஸித்தீகுல் அக்பர்  رضي الله عنه அவர்களது புதல்வர் முஹம்மது என்பவராகும் .இவர் மதீனாவைச் சேர்ந்தவர் .

2. ஜமல் யுத்தம் ஈராக்கில் தான் நடந்தது . 

சரித்திரம் மற்றும் இஸ்லாமிய வரலாற்றினை பார்க்கும் யாரும் இதை ஒரு காரணமாக கொண்டு ஈராக்கை குற்றஞ்சாட்ட மாட்டார் . ஏனெனில் ஜமல் யுத்தம் யாரால் தோன்றிற்று ? என்பதும் ,யார் யாருக்கிடையே நடைபெற்றது என்பதும் அவர்களுக்கே தெரியும் .

3. ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்கள் ஈராக் நாட்டிலுள்ள கூபாவில் வைத்துதான் ஷஹீதாக்கப்பட்டார்கள் .  
   

ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ رضي الله عنه அவர்களை கொலை செய்தவர்கள்  நஜ்துவாசிகளாகும் . அதிலும் குறிப்பாக முழர் என்ற குடும்பத்தை   சேர்ந்தவர்களில் ஒருவனாகும் . 

4. ஸிஃப்பீன் யுத்தம் ஈராக்கில் தான் நடைபெற்றது .

உண்மையில் இந்த யுத்தம் ஈராக்கில் நடைபெற்றிருந்தாலும் கூட அதற்கு மூல காரணவாதியாக இருந்தவர் புனித மக்காவில் பிறந்து ,புனித மதீனாவில் பல வருடங்கள் வாழ்ந்த ஒருவராகும் . அவருக்கு உதவி செய்தோர் ஷாம் தேசத்தை சேர்ந்தவர்களாகும் . இவைகளனைத்துக்கும் முக்கிய காரணமாக இருந்தோர்  இஸ்லாமிய வேடமணிந்த முனாஃபிக்குகளாகும் .

ஆக உலகின் நாலா பக்கங்களிலும் பல்வேறு பிரச்னைகள் தோன்றின . இருப்பினும் அவை அனைத்தும் ஒரு குறுகிய காலத்திற்குள் மறைந்தும்  போய் விட்டன . ஆனால் நபித்துவத்திற்கு முன்பிருந்தே நஜ்த்துவாசிகளால்  தோற்றுவிக்கப்பட்ட பிரச்சனை மட்டும் தான் ஏறக்குறைய 1400 ஆண்டுகளுக்கு பிறகும் கூட இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .அத்துடன் அது தஜ்ஜாலின் வருகை வரை நீடிக்கும் என்பது நாதர் நபி     صَلّى اللهُ عليهِ واٰله وسلّ  அவர்களின் வேத வாக்காகும் . 

மேலும் ஈராக்கில் நடைபெற்ற பிரச்சனைகளை காரணமாக வைத்து நஜ்தை குறித்து அறிவிக்கப்பட்ட நபிமொழியோடு ஈராக்கை தொடர்பு படுத்தியதற்குரிய காரணமாவது ....
  
" ஹுனாலிகஸ் ஸலாஸிலு வல் ஃபிதன்   "  என்ற வாக்கியம் தான் .
அங்கே அப்போது காணப்பட்ட குழப்பங்களையும் ,அனாச்சாரங்களையும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட ஒன்றாகும் .ஆனால் அவைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு நஜ்த் என்னும் சொல்லுக்கு தவறான பொருள் கூறி இறகை இப்பிரச்னையில் இழுத்து விட்டுள்ளனர் . இது தான் திருடி அயல் வீட்டை நம்ப மாட்டாள் என்ற பழமொழிக்கு ஒப்பானதாகும் .

பின்னும் இவர்கள் தரும் கருத்துதான் சரியானது எனில் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுக்கு மறைவான செய்திகளெல்லாம் தெரியும் என்ற நல்லோர்களின் கருத்தை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? இப்பொது முன்பின் யோசிக்காமல் இப்படியொரு கருத்தை சொல்லி விட்டோமே என்று பேயறைந்தவனைப் போல் முழிக்கின்றார்கள் போலும் ! .

அப்பப்பா ! தனக்கு சாதகமான கருத்தை உறுதிப்படுத்துவதற்காக எத்தனை பொய் .எத்தனை வீண்பழி . எவ்வளவு பித்தலாட்டம் . இதுதான் குர்ஆன் , ஹதீதை உள்ளது உள்ளபடியே பின்பற்றுவோரின் இலட்சணம் .

புஹாரி ஷரீபிலுள்ள நபிமொழியை தங்களுக்கு தோதாக ,பொய்யான தவறான கருத்தை சொல்லி அந்த நபிமொழியில் இனங்காட்டப்படும் நஜ்த் என்னும் சொல் ஈராக்கை தான் குறிப்பிடுகின்றது என்று வாதிட்டவர்கள் ,அக்கருத்தை ஆதாரப்படுத்த தப்ரானி கபீரில் கூறப்படுள்ள ஹதீது ஒன்றையும் , முவத்தா இமாம் மாலிக்கில்  
கூறப்படுள்ள ஹதீது ஒன்றையும் எடுத்துக் காட்டுகின்றனர் .

அதற்குமுன் ஒரு சந்தேகம் - அதாவது ஒரு ஹதீதில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டால் அது வேறொரு இடத்தை குறிக்காது என்னும் போது ஈராக்கில் நடந்த பிரச்னையை காரணம் ஆக்கி , நஜ்த் சம்பந்தமான ஹதீதை ஈராக்குடன் இணைப்பது அடிமடையர்களின் வேலையாயிற்றே ?

பிறகு மீண்டும் ஏன் குற்றஞ்சாட்டிக் கொண்டே இருக்கின்றனர் எனில் ,இதற்கான பதிலை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் தமிழக வஹாபிகளான ஹாமித் பக்ரியம் ,அவரது சகாக்களும் மத்ஹபுகளை    நொறுக்குவதற்காக அத்துர்ருல் முக்தார் என்னும் நூலில் கூறப்படுள்ள விஷயத்தை தங்களுக்கு சாதகமாக திசை திரும்புவதை நாம் எடுத்துக் காட்டினால் மேற்கண்ட சர்ச்சைக்குரிய பிரச்சனைக்கும் நாம் விடை கண்டு விடலாம் .

ஆம் . இமாம் அல்லாமா ஷாமி ரஹிமஹுல்லாஹு அவர்கள் தமது 
துர்ருல் முக்தாரின் விளக்கவுரையில் ,பாகம் 4,பக்கம் 264ல் அழிச்சாட்டியம் செய்வோர் என்னும் பாடத்தில் ...


"நஜ்திலிருந்து வெளிப்பட்ட சிலர் தம்மை ஹன்பலி மத்ஹபை பின்பற்றுவோர் என்று சொல்லிக்கொண்டு அவர்களின் கொள்கைக்கு மாறுபட்டோரை முஷ்ரிக்கீன்கள் எனக் கூறி தங்களை மட்டுமே முஸ்லிம்கள் என்று கூறி ஸுன்னத் வல் ஜமாத்தினரை கொல்வது ஆகுமான ஒன்றென தீர்ப்பளித்தனர் . இன்னும் அவர்கள் மக்கா முகர்ரமாவையும் ,மதீனா முனவ்வராவையும் அடாவடித்தனத்தை கொண்டும் கைப்பற்றினர் . இத்தகையோர் இஸ்லாத்தை விட்டும் விரண்டோடியவர்களாகும் . பின்னர் இன்னும் இவர்கள் கவாரிஜிய்யீன்கள் என்றும் குறிப்பிடுகின்றனர் " .இதனால் தான் இவர்கள் இந்த நூலை இப்போது அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் . 

மேலும் இவர்களுடைய பார்வையில் மத்ஹபுகள் அனைத்தும் வழிகேடு என்பதால் மத்ஹபுகளின் முக்கிய பிரமுகரான இமாம் சிராஜுல் உம்மத் அபூஹனீபா  رضي الله عنه அவர்கள் ஈராக்கில் உள்ள கூபாவில் பிறந்து ,பக்தாதில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாலும் , இவர்களின் விரோதிகளான ஸுபியாக்கள் - வலிமார்கள் ஈராக்கிலிருந்து தான் வெகுவேகமாக உலகமனைத்திலும் பரவிற்று என்பதாலும் இவைதான் இஸ்லாத்தில் குழப்பங்களை தோற்றுவித்தது எனக் கருதி அந்நாட்டு முஸ்லிம்களை இழிவு படுத்துகின்றனர் .  

அனால் இந்த இடத்தில எதிர்தரப்பாரின் கருத்துக்களை முறியடிப்பதற்காக ஈராக் பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம் .


No comments:

Post a Comment