Tuesday, 9 July 2019

நஜ்தும் அதன் பொருளும் - 1

பொதுவாக குர்ஆனிலோ அல்லது ஹதீதுகளிலோ பயன்படுத்தப்படும் சொற் களுக்கு ,அகராதிப் பொருள் என்ற ஒன்றும் பரிபாஷைப் பொருள் என்ற ஒன்றும் என்று இருவகைப் பொருள் சொல்லப்படும் .

உதாரணமாக பித்அத் என்னும் வாக்கியத்தை எடுத்துக் கொண்டால் முன்மாதிரி ஏதுமின்றி பதிதாகச் செய்யப்படும் காரியத்திற்கு அகராதியின் அடிப்படையில் பித்அத் என்று சொல்லப்படும் .  இதே போல அக்காரியம் குர்ஆன் , ஹதீதுடைய சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக இல்லாமல் இருந்து நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் காலத்தில் செயல்படுத்தப்படாத ஒன்றாக இருந்தால் அப்போது பரிபாஷையில் அப்பெயர் கொண்டு அழைக்கப்படும் .

 இதேபோல வாய்மூடி மெளனமாக இருக்கும் ஒருவனைப் பார்த்து ஸாயிம் -நோன்பாளி என்று சொல்லலாம் .ஆனால் மார்க்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப உண்ணாமலும் ,பருகாமலும்  ஏனைய சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு செயல்படுபவருக்கே பரிபாஷையில் நோன்பாளி என்று சொல்லப்படும் .

இப்படி ஒவ்வொன்றுக்கும் இருவகையான பொருள் இருப்பதை கவனத்தில் கொண்டால் நமது இஷ்டப்படி எல்லாம் பொருள் சொல்ல  முடியாது .  நோன்பைப் பற்றியோ ,பித்அத்தைப் பற்றியோ மார்க்க சம்பந்தமான அனுஷ்டானங்களில் எப்போது பேசப்பட்டாலும் அப்போதெல்லாம் அதற்குரிய அகராதிப் பொருளை நாம் சொல்லக் கூடாது . மாறாக பரிபாஷையில் அதற்குரிய பொருள் எதுவோ அதைத்தான் சொல்ல வேண்டும் . அத்துடன் இந்த இடத்தில்  நாம் நமது முன்னோர்களை பின்பற்றுவதுதான் கடமையாகும் .

பரிபாஷைக்குரிய பொருளை சொல்வதாக இருந்தால் கூட அப்பெரியோர்கள் சொன்ன பொருளைத் தான் சொல்ல வேண்டும் .அதற்கு மாறாக நாம் நமது முன்னோர்களின் பாதையை விட்டு விட்டு தனியானதோர் பாதையை உருவாக்குவோமேயானால் அப்பாதை வெகுவிரைவில் முற்று பெற்று விடுமென்பதையும் நாம் நினைவில் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம் .

இதன் அடிப்படையில் நஜ்த் என்னும் பதத்திற்கும் இரு வகையான பொருளுண்டு . அது அகராதிப் பொருள் என்ற ஒன்றும் பரிபாஷை பொருள் என்ற வரைபட வல்லுநர்களின் தீர்ப்பென்னும் மற்றோன்றுமாகும் . இனி அது பற்றி பார்ப்போம் .

1 - மேடான ,திடலான பூமி,பாதை  நஜ்த்  என்னும் ஊர் . இவை அனைத்தும் நஜ்த்துக்குரிய   அகராதிப் பொருளாகும் . 
 [ நூல்  - அல் காமுஸுல் அன்வார் , பக்கம்  207 ] 

அகராதியில் கூட நஜ்த் என்பது ஒரு ஊரின் பெயர் என்று ஒப்புக் கொள்வது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும் . காரணம் அது தனிப்பட்ட ஒரு ஊரின் பெயர் என்பது  தான் இரண்டாவது பொருளாகும் . அத்துடன் நமது விவாதத்தின் அசல் நோக்கமும் அது தான் . அத்துடன் இமாம் கத்தாபி போன்றோரின் கருத்தை ஆதாரமாக காட்ட எதிர் தரப்போருக்கு தகுதியில்லை என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம் . 

"அன்றைய காலத்தில் மத்திய கிழக்கு நாடுகள் ஹிஜாஸ் ,ஈராக் , பஹ்ரைன் , நஜ்த் ,எமன் என ஐந்து மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தன . இதில்  ஹிஜாஸ் மாகாணத்தை விட நஜ்த் மேடான பூமியாக அப்போதே இருந்துள்ளது . அதனால் தான் அம்  மாநிலத்திற்கு அப்பெயர் வைக்கப்படுள்ளது . 

இது போன்றே விசாலமான பாதைக்கும் நஜ்த் என்று சொல்லப்படுவதுண்டு . 

இதன் அடிப்படையில் தான்   என்று திருமறையில் உபயோகிக்கப்பட்டிருப்பதை அனுமானிக்க முடியும் . இதில் திஹாமா மற்றும் ஈராக்குக்கு இடைப்பட்ட பகுதிதான் நஜ்த் பகுதி  ஆகும் ".

[ நூல்  - மிர்ஆத் ஷரஹ் மிஷ்காத் ,பாகம் 7 ,பக்கம் 119 ]  

அடுத்து மஹ்மூத் ஷுக்ரி அல் ஆலூஸி என்பவர் "தாரீகுன் நஜ்த் "    என்னும் நூலில் நஜ்த் பற்றி எடுத்துக்காட்டும் சில கருத்துக்களை நாமும் இங்கே எடுத்துக் காட்டுகின்றோம் . இவர் ஈராக் நாட்டை சேர்ந்தவர் என்றபோதிலும் நஜ்துடைய ஷைகின் கொள்கையை கொண்டவர் .


"தெரிந்து கொள் ! நிச்சயமாக நஜ்த் என்னும் சொல் திடலான பகுதிக்கு அகராதியில் சொல்லப்படும் . இருப்பினும் திஹாமாவையும் , எமனையும்  தனக்கு மேற்குப்பகுதியிலும் , ஈராக்கையும் ஷாமையும் தனக்கு கீழ்ப்பகுதியிலும்  கொண்டுள்ள இடைப்பட்ட பகுதியே நஜ்தாகும் "



"ஹிஜாஸ் ,ஷாம் ,ஈராக் ,எமன் ,திஹாமா ஆகிய இடங்களுக்குஇடைப்பட்ட பகுதியே நஜ்தாகும் ". 


"நிச்சயமாக நஜ்தாகிறது ஹிஜாஸ் மற்றும் ஈராக் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளாகும் ".


"ஈராக் நஜ்தின் கீழ் பகுதியிலுள்ள பிரதேசமாகும் . இவ்வாறே ஹிஜாஸ் ,திஹாமா போன்றவை நஜ்துக்கு மேல் பகுதியிலுள்ள பிரதேசமாகும் ".


"அரேபியப் பிரதேசத்திலுள்ள மகத்தானதோர் பிரதேசம் என்பது பிற்கால அறிஞர்கள் சிலரது கணிப்பாகும் ". 


"திடலான பூமிக்கு நஜ்த் என்று சொல்லப்படும் . இன்னும் அது ஹிஜாஸுக்கு அப்பாற்பட்ட இடம் மட்டுமல்ல . ஈராக்கை அண்மித்த இடத்திற்கு குறிப்பாக சொல்லப்படும் ". 

[ நூல் - உம்தத்துல் காரீ ,அல்லாமா இப்னுல் அதீர் , பாகம் 17,பக்கம் 199 ] 


"நஜ்தானது அரேபிய ஊர்களில் ஒன்றாகும் "

[ நூல் - உம்தத்துல் காரீ ,அல்லாமா இப்னுல் அதீர் , பாகம் 17,பக்கம் 199 ] 


"மேற்குப்பகுதியில் திஹாமாவுக்கும் ,எமனுக்கும் ,கீழ்ப்பகுதியில் ஈராக்குக்கும் ,ஷாமுக்கும் இடைப்பட்ட விசாலமான பூமியின் ஒரு பகுதியே நஜ்தாகும் "

[ நூல்  - முஃஜமுல்  புல்தான் , பாகம் 5,பக்கம் 262 ] 

இவை தவிர மற்றுமோர் பிரதானத்திற்குரிய வலுவான ஆதாரம் என்னெவனில் நஜ்துக்கும் , ஈராக்குக்கும் இஹ்ராம் கட்டி தல்பியா சொல்வதற்கு கட்டாயமாக்கப்பட்ட இடங்கள் என்பது வெவ்வேறாகும் . இதை அடுத்து வரும் நபிமொழி இதை ஊர்ஜிதப்படுத்துகின்றது .


" மதீனாவாசிகள் துல் குலைபா அல்லது ஜுஹ்பா என்னும் இடத்திலும் , ஈராக்கை சேர்ந்தவர்கள் தாது இர்க் என்னும் இடத்திலும் ,நஜ்தை சேர்ந்தவர்கள் கர்னுல் மனாஸில் என்னும் இடத்திலும் ,எமனை சேர்ந்தவர்கள் யலம்லம் என்னும் இடத்திலும் தல்பியா சொல்லிக் கொள்ளட்டும் என்பதாக அருமை நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் கூறியதாக ஹழ்ரத் ஜாபிர் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றனர் "

[ நூல் - முஸ்லீம் ஷரீப் , மிஷ்காத் கிதாபுல் மனாஸிக் ] 

  ஆக மொத்தத்தில் திடலான , மேடான பூமிக்கு நஜ்த் என்று சொல்லப்பட்டாலும்  நபிமொழியில் இடம் பெற்றுள்ள நஜ்த் என்னும் சொல் அரேபிய மாநிலங்களில் ஒன்றையே சாரும் . மாறாக மதீனா முனவ்வராவிலிருந்து ஈராக்கை உற்று நோக்கினால் அது திடலான பூமியாக இருப்பதால் ஈராக்கை தான் நஜ்த் எனச் சொல்லப்பட்டதாகச் சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற கதையாகும் .

மேலும் ஈராக் ஒரு தனிப் பிரதேசம் என்பதைப் போல் நஜ்தும் தனிப் பிரதேசம் தான் என்பதை இதுவரை எடுத்துக்காட்டப்பட்ட கருத்துகள் அனைத்தும் அசைக்க முடியாத ஆதாரங்களைக் கொண்டு தெளிவுபடுத்துகின்றது .

இல்லையில்லை ,இரண்டு பகுதிகளும் வெவ்வேறானது என்று வாதிக்கும் எதிர் தரப்பார் ,அதிலும் குறிப்பாக மஹமூத் ஷுக்ரியின் நூலில் 52ஆம் பக்கத்தில் 92ஆம்  பக்கம் வரை சொல்லப்பட்ட 

" நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் எமனுக்கும் ,ஷாமுக்கும் பிரார்த்தித்த போது எங்களின் நஜ்துக்கும் என்று சொன்ன பிறகும் கூட அந்த பகுதிக்கு பிரார்த்திப்பதற்கு பதிலாக நபியவர்கள் அது பிரச்சினைக்குரிய பிரதேசம் . அங்கிருந்து தான் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் "
என்றெல்லாம் சொல்கிறார்களென்றால் அந்த நஜ்த் ஈராக்கை சேர்ந்த பகுதியாகும் என்று சொல்வது வேண்டுமென்றே  திட்டமிட்டு செய்கின்ற சதியாகும் .

சரி ,அவருடைய வாதப்படியே வைத்துக் கொண்டாலும் கூட ஈராக்கை அந்த நபிமொழியோடு ஒப்பிட்டு குற்றஞ்சாட்டுவதற்கு வேறு காரணங்களும் ,அதற்குரிய ஆதாரங்களும் இருக்கமல்லவா !  
அதையும் ஈராக் குறித்து வாதிப்போர் தமக்குரிய ஆதாரமாக எடுத்துக்காட்டலாம் அல்லவா ! 

அதையும் இங்கே உங்களின் பார்வைக்கு வைத்து அதற்குரிய விளக்கத்தையும் நாம் தருகின்றோம் . அதுதான் ஒரு நலன் விரும்பியின் அடையாளமாகும் . ஆம் .இரு தரப்பாரின் கருத்தையும் எடுத்துக் காட்டி விளக்கம் தரும் போதுதான் உண்மை எது ? பொய் எது ? என்று இலகுவாக புரிந்து கொள்ள முடியும் .

எல்லோருமே குர்ஆன் , ஹதீதைத் தானே காட்டுகின்றனர் . இந்நிலையில் பொதுமக்கள் யாரை பின்பற்றுவது என்னும் குற்றச்சாட்டிலிருந்தும் தப்பித்துக் கொள்வதோடு யார் தருகின்ற விளக்கம் சரியானது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும் .  இதற்குரிய வாய்ப்பை நமக்கு தந்த வல்லோன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் !

நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களின் பிரார்த்தனைக்கு இலக்காக்கப்படாத நஜ்தானது ஈராக்கை சேர்ந்தது தான் எனக் குற்றஞ்சாட்டுவதற்குரிய தெளிவான விளக்கம் சொல்லப் பட வேண்டமாயின் முதலில் அந்த நபிமொழியின் அடுத்த வார்த்தையான ....


"இன்னும் நஜ்திலிருந்து தான் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் " எனக் கூறப்பட்டுள்ள வார்த்தைக்குரிய விளக்கத்தை நாம் தரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம் . இதில் தெளிவாக்கப் படவேண்டிய முக்கியமான சொல் "கர்னுன் - கொம்பு " என்னும் சொல்லுக்குரிய விளக்கமேயாகும் .

இனி கர்னுன் என்னும் சொல்லுக்கு " மலை உச்சி ,  சடை , சூரியனின் முன்பாகம் , வயதில் சமமான , நூற்றாண்டு , காலத்தின் ஒரு பகுதி ,வாள் , கொம்பு ,உச்சந்தலையின் ஒருபகுதி என்பது பொருளாகும் "
[ நூல்  -அல் காமுஸு ல் அன்வார் , பக்கம் 159 ] 

இதன்றி ....


 "கர்ன்   என்பது ஒரு சமுதாயமாகும் . ஒரு சமுதாயம் (கூட்டத்தார் ) அழிந்த பின்னர் இன்னொரு சமுதாயம் (கூட்டம் ) தோன்றுவதாகும் "

இன்னும் .....


" கர்ன் என்பதற்கு சக்தி என்றும் பொருள் சொல்லப்படுகிறது . அதாவது அங்கிருந்து ஷைத்தானின் சக்தி வெளியாகும் " என்றும் பொருள் தரப்படுகிறது .

[ நூல் - பத்ஹுல் பாரி , 13-51 , இப்னு பத்தால் ,10-44 , கவ்தருள் மஆனி , 10-390 , உம்தத்துல் காரி , 24-199 ] 

ஆக கர்ன் என்ற சொல்லுக்கு மேற்கொண்ட விளக்கத்தை கொண்டு நஜ்திலிருந்து ஷைத்தானுடைய கொம்பு வெளியாகும் என்று சொன்னதன் கருத்தானது ,

"ஷைத்தானின் ஒரு படைப்பிரிவு அழிந்தபின் இன்னொரு படைப்பிரிவு தோன்றும் . அல்லது பெயரில் பிரபலமான ஷைத்தானின் கூட்டமொன்று இன்னொரு மாற்றுப் பெயரில் வேறொரு கூட்டமாக வெளியாகும் என்பது இதன் கருத்தாகும் " 

அத்துடன் புதுப்புது பெயரில் ஷைத்தானின் படைகள் எந்த நாட்டில் எந்த இடத்தில் தோன்றினாலும் அதெற்கெல்லாம் மூலஅடித்தளம் நாயகம் 
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களின் சாபத்திற்குள்ளான நஜ்த் பகுதியேயாகும் . 

No comments:

Post a Comment